புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல அவதிப்படும் மக்கள்
கொழும்பில் (Colombo) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று (10) முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடும் சிரமத்திற்குள்ளான மக்கள்
எனினும் இன்று (11.4.2024) காலையில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு 1,400 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை ஈடுபடுத்தியுள்ளதுடன், தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நேற்று இரவு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட தூர சேவை பேருந்துகள் இன்மையால் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில், போதியளவு நெடுஞ்சாலைப் பேருந்துகள் இயங்கிய போதிலும், இன்று காலை மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் ஏராளமான மக்கள் காணப்பட்டனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்குகம் ஏராளமான மக்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.