மோசமான காலநிலையை தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பிய போக்குவரத்து சேவை
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர வீதி,பிரதான வீதி,புத்தளம் வீதி மற்றும் களனிவெளி ஆகிய புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அலுவலக புகையிரத சேவைகள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
வடக்கு புகையிரத வீதி மற்றும் மலையக புகையிரத வீதி மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் அப்பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிப்பது தாமதாகும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் கடந்த வாரம் பொதுபோக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியமை, பாலம் உடைந்தமை உள்ளிட்ட காரணிகளால் பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.
நேற்றைய தினம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைவான மட்டத்தில் பதிவாகியதை தொடர்ந்து பொதுபோக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் மலையகத்துக்கான புகையிரத சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையக புகையிரத வீதிகள் மற்றும் சமிஞ்சை கருவிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதால் மலையகத்துக்கான புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதை உறுதியாக குறிப்பிட முடியாது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு புகையிரத பாதை வெள்ளத்தில் மூழ்கியதை தொடர்ந்து பொலன்னறுவை,மன்னம்பிட்டிய ஆகிய பகுதிகளில் புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளதால் வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிப்பதிலும், கிழக்குக்கான புகையிரத சேவையை ஆரம்பிப்பதிலும் தாமதம் ஏற்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கரையோர புகையிரத பாதையில் பாரிய பாதிப்பு ஏற்படாத காரணத்தால் கரையோரத்துக்கான புகையிரத சேவை வழமையாக நேர அட்டவணைக்கு அமைய இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் புத்தளம் வீதியில் மேல்நோக்கி (கொழும்பு கோட்டை – கொச்சிக்கடை) காலை 04 மணிமுதல் இரவு 07.10 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதேபோல் கீழ் நோக்கி (கொச்சிக்கடை – கொழும்பு கோட்டை) காலை 06.20 மணிமுதல் இரவு 08.20 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
களனிவெளி புகையிரத பாதையில் மேல்நோக்கி (கொழும்பு கோட்டை – அவிசாவெல்ல வரை காலை 08.30 மணிமுதல் இரவு 08 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.கீழ் நோக்கி( அவிசாவெல்ல- கொழும்பு கோட்டை) காலை 04.40 மணிமுதல் பகல் 12.25 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பிரதான புகையிரத வீதியில் மேல்நோக்கி (மருதானை – கனேமுல்ல) காலை 06 மணிமுதல் மாலை 06.40 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
கீழ்நோக்கி (கனேமுல்ல –கொழும்பு கோட்டை) காலை 07.10 மணிமுதல் இரவு 08 மணிவரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ராகம புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு மெதுவாக செல்லும் புகையிரதங்கள் திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ள காரணத்தால் அம்பேபுஸ்ஸ-பொல்ஹாவெல்ல- றம்புக்கனை- கண்டி- மாத்தளை- பதுளை, பொல்ஹாவெல்ல – காங்கேசன்துறை, மஹவ –மட்டக்களப்பு, மஹவ – திருகோணமலை,மதவாச்சி – மன்னார், கொச்சிக்கடை – புத்தளம் ஆகிய புகையிரத சேவைகள் இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.