பங்களாதேஷில் புகையிரத விபத்து; 17 பேர் பலி
பங்களாதேஷில் இரு புகையிரதங்கள் தடம்புரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷ் - டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் புகையிரதநிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்துள்ளது.
பைரப் புகையிரத நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக பயணத்தடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்மாறிக் கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் புகையிரதத் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது.
இதில், எக்ஸ்பிரஸ் புகையிரத பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.
இவ்விபத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.