வடக்கின் பெற்றோர்கள் அன்றும், இன்றும் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது; யாழில் ஜனாதிபதி
வடக்கின் பெற்றோர்கள் அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த நிலையில் , இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வடக்கு மாகாண நிகழ்ச்சி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் 'அகன்று செல்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

அதிகாரத்தை இழந்த இனவெறிக் குழுக்கள்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார் . இதனபோது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
"போதைப்பொருளின் ஆபத்து எந்த இடம், எந்தப் பிரஜை, எந்த நகரம், எந்தக் கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர் அல்லது தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவுகின்றது.
நாட்டின் இளைஞர்களை இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாகச் செயற்படுத்தப்படும்.
அது பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது. அதற்காக, அனைவரும் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் ஒரு பாரிய பாதுகாப்பு வலயமாகச் செயற்படுவோம்.
அதிகாரத்தை இழந்த இனவெறிக் குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சிக்கின்றன. அந்த இனவாதப் போக்குகள் எதுவும் நமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்களிக்கும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.