உலக பெண்கள் தினம்! ஐந்து வயதில் சுனாமியில் சிக்கிய சிறுமியின் துயர கதை
ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை பிரதேசத்தில் சுனாமியில் சிக்கிய 5 வயதான சிறுமி 18 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு பிள்ளைகளின் தாயாக மெதிரிகிரிய பிரதேசத்தில் பாழடைந்த வீடு ஒன்றில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முழு உலகமும் பெண்கள் பற்றி கவனத்தை செலுத்தும் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பெண் அனுபவித்த துயரமான செய்தி, உலக பெண்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சம்பவங்களாக உள்ளன.
வயது, பெயர், பிறப்பத்தாட்சி பத்திரம் எதுவுமின்றி சமூகத்தில் அநீதிகளை கஷ்டங்களை அனுபவித்து வரும் இந்த பெண், தற்போதும் கடும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்.
தனது வயது என்ன என்பதை சரியாக அறியாத இந்த பெண், கே.ஏ. கமலா பெரேரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் தற்போது இலக்கம் 191 ஜயகம்புர மஹா அம்பகஸ்வெவ, மெதிரிகிரிய என்ற விலாசத்தில் வசித்து வருகிறார்.
அத்துடன் இந்த பெண் முன்பள்ளி படிக்கும் வயதில் மகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் வயதில் இருக்கும் மகன் ஆகியோரின் தாய். கணவனால் ஏமாற்றப்பட்ட இந்த பெண், கூலி வேலை செய்து, வாழ்க்கையை நடத்தி வருவதுடன் வாடகை வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
தங்காலை பிரதேசத்தில் பிறந்த இந்த பெண், பாடசாலைக்கு செல்லும் வயது நெருங்கும் தருவாயில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கியுள்ளார்.
அவரது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரியும் சுனாமி பேரலையில் சிக்கியுள்ளனர். முழு குடும்பமும் பேரலையில் சிக்கி காணாமல் போன நிலைமையில், அப்போது சிறுமியாக இருந்த இந்த பெண் எப்படி யார் தன்னை காப்பாற்றியது என்பதை இன்று வரை அறியாமல் இருக்கின்றார்.
தங்காலை பிரதேசத்தில் சுனாமி இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்த போது, அதே பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபரான பெண் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்த்துள்ளார். இவரை வளர்த்தவர் கே.ஏ. கமலா பெரேரா என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த பெண்ணுக்கு 12 வயதான நிலையில், வளர்த்த பெண் புற்று நோயால் மரணமடைந்துள்ளார். வீட்டில் வேலைகளை செய்து வந்த பெண்ணை, மரணமடைந்த பாடசாலை அதிபரின் மருமகள், கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு வேலை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஆடைகளை சலவை செய்தல், பிள்ளைகளை பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் வீட்டில் வேலை செய்து வந்த நிலையில், வீட்டில் நிர்மாணப் பணிக்காக வந்த இளைஞர் ஒருவர், பெண் 14 வயதாக இருக்கும் போது, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்.
14 வயதாக இருக்கும் போது, கொழும்பில் உள்ள வீட்டில் இருந்து தன்னை அழைத்துச் சென்ற நபர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் என அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த நபர், கொழும்பில் இருந்து மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய போது முதல் பிள்ளை பிறந்துள்ளது. தனது கணவரின் பிறந்த தினத்திற்கு ஒரு பின்னரான திகதியை குறிப்பிட்டு, போலி பிறப்பத்தாட்சி பத்திரத்தை தயார் செய்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.
சரியான புரிதலோ, கல்வியோ கற்காத, அன்பான அரவணைப்பும் கிடைக்காத இளம் வயதில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகும் தருவாயில், தன்னை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதாக உறுதி வழங்கி, தன்னை அழைத்து வந்த கணவனின் பல செயல்கள் தெரியவந்துள்ளது.
தனது கணவன் சிறுமிகளை ஏமாற்றும் நபர் என்பது பெண்ணுக்கு தெரியவந்துள்ளதுடன் மெதிரிகிரிய பிரதேசத்தில் மற்றுமொரு சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் தனக்கு வேறு விதமான மறுமொழிகள் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வாழ இடமின்றி வாடகை வீட்டில் வசிக்கும் தான் பாதுகாப்பாக இருக்கவும் தனது பிள்ளைகளுக்கு இப்படியான நிலைமை ஏற்படாமல் இருக்க உதவுமாறு அந்த பெண், சர்வதேச பெண்கள் தினத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி உதவி செய்யும் போர்வையில், தனது வாழ்க்கையில் மீண்டும் பாவிகளை சந்திக்க கூடாது என வேண்டுவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
தனக்கு உதவ விரும்புவோர் இருந்தால், கே.ஏ. கமலா பெரேரா, மக்கள் வங்கி, மெதிரிகிரிய, வங்கிக் கணக்கு இலக்கம் 231 2 001 2 00 82578 முடிந்த உதவி தொகையை அனுப்பி வைக்குமாறும் அந்த பெண் கேட்டுள்ளார்.
மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 0773 768474 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு கேட்டறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.