அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய சான்றிதழ்
எதிர்காலத்தில் அனைத்து வாகனங்களும் ‘வீதித் தகுதிச் சான்றிதழ்’ கொண்டிருப்பது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்றும், உலகின் வளர்ந்த நாடுகளில் இது கட்டாயச் சான்றிதழாகும் என்றும், இந்தச் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் வீதியில் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

வணிக வாகனங்களுக்கு தற்போது தேவைப்படும் ‘உடற்தகுதிச் சான்றிதழ்’ (Fitness Certificate) அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்படும்.
தற்போது அனைத்து வாகனங்களுக்கும் தேவைப்படும் உமிழ்வுச் (புகைச்) சான்றிதழுடன் (Emission Certificate) உடற்தகுதிச் சான்றிதழை இணைத்து இந்த ‘வீதி தகுதிச் சான்றிதழ்’ ஒரே இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது மிகவும் சிக்கலான மற்றும் விரிவான திட்டம் என்பதாலும், கவனமாக ஆராய வேண்டிய பணி என்பதாலும், அடுத்த ஆண்டு முதல் அதன் ஆரம்பப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
'புகை சான்றிதழ்கள்' வழங்குவதற்கான தற்போதைய முறைமை 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருப்பதால், புதிய முறை இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2028 முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.