இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து; பலர் வைத்தியசாலையில்
பஸ்யால - கிரியுல்ல வீதியின் தன்சலேவத்த பகுதியில் பாரவூர்தி, எதிரே வந்த வேன் மற்றும் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், மதியகனே பகுதியைச் சேர்ந்த சந்தன பெரேரா( 47) மற்றும் மானெல் பத்திரன (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பஸ்யாலயில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தி, எதிரே வந்த வேன் மற்றும் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் வேனின் சாரதியும் வேனின் பின்னால் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை விபத்தில் ஆபத்தான நிலையிலில் இருந்த குழந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.