இரகசிய தகவலால் காட்டுக்குள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிக்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம்
இரத்தினபுரி பலாங்கொடை பகுதியில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமுற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை, முகுனமலே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (01) அதிகாலை 4.50 மணியளவில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேடுதல் நடவடிக்கை
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும், மற்றொரு அதிகாரியும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோட முயன்றுள்ளனர்.
பொறுப்பதிகாரி சந்தேகநபரைத் துரத்திச் சென்றபோது அதிகாரி எதிர்பாராதவிதமாக நிலத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதன்போது அவரது இடுப்பில் இருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கி வெடித்ததில், அவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அதிகாரி உடனடியாக பலாங்கொடை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்