பாடசாலை வேனிலிருந்து இறங்கிய 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி ; இரு இளைஞர்களும் பலி
மெல்சிறிபுர பகுதியில் லொறி மோதி 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பன்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பே - மெல்சிறிபுர வீதியின் ஹல்மில்லவெவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேன் ஒன்றிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற போதே, அதே திசையில் வந்த லொறி குறித்த மாணவன் மீது மோதியுள்ளது.

இரு இளைஞர்களும் பலி
இதன்போது காயமடைந்த அவர் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை - செங்கலடி வீதியின் எஹலகஸ்பல்லம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஹரஸ்கல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் தம்பதெனிய பகுதியில் கிரிஉல்ல பகுதியிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, 18 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.