கணவன்–மனைவி வாக்குவாததால் நேர்ந்த விபரீதம் ; கல்லடி தாக்கத்தில் கணவர் பலி
இந்தியாவில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் உயிரிழப்பில் முடிந்துள்ளது.
அதிகாரிகளின் தகவல்படி, மாலை நேரத்தில் இருவரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அது கடுமையாக வளர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸார் தீவிர விசாரணை
இதனால் கோபமடைந்த மனைவி அருகிலிருந்த கல்லை எடுத்து கணவரின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, கணவர் உயிரிழந்ததை உறுதிசெய்த மனைவி, அவரது உடலின் அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் தானாகவே பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் சரியான காரணம் இதுவரை தெளிவாகவில்லை என்றும், சம்பவம் கோபத்தினாலா அல்லது வேறு காரணங்களாலா ஏற்பட்டது என்பதைக் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.