யாழ் நகரில் வீதிக்கு இறங்கிய பொதுமக்களால் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ் நகரில் சிறிது நேரம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.
இன்று காலை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகிப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் காத்திருந்தனர். எனினும் , நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்தனர்.
இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைபட்டதுடன் குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவகையில்,
இன்று காலை முதல் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அங்கு வந்திருந்த பொலீசார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு செல்லுமாறும் தெரிவித்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அங்கும் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத நிலையில் விரக்தியடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மீண்டும் கொட்டடியில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலை முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு முரண்பட்டனர்.
அதன் பின் நீண்ட நேரத்தின் பிறகு அங்கு மேலதிகமாக பொதுமக்கள் ஒன்றுகூடாதவகையில் தடுக்கப்பட்டுபொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு கூடியவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
