குரங்குகளால் ஏற்பட்ட பதற்றம் ; தாக்குதலுக்கு உள்ளான பெண்
கண்டியில் நேற்று முன்தினம் (09) குரங்குகளால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குரங்களால் தினந்தோறும் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்பத்துவதற்காக பிரதேசவாசிகள் இணைந்து கண்டி - தர்மாலோக பகுதியில் சுற்றித்திரிந்த 15 குரங்குகளை பிடித்து கூடுகளில் அடைத்து வைத்து அதனை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரதேசவாசிகளுடன் வாக்குவாதம்
இதன்போது அங்கிருந்த பெண் ஒருவர் கூடுகளில் அடைத்து வைத்துள்ள குரங்குகளை வெளியே விடுமாறும், இது விலங்குகளின் உரிமைகளை மீறும் செயல் எனவும் கூறி பிரதேசவாசிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பிரதேசவாசிகளுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் தன்னை தாக்கியதாக கூறி அந்த பெண் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணை தாக்கவில்லை என பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.