ஆள் ஒரு விமானத்தில் பொதிகள் ஒரு விமானத்தில்; சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். குறித்த வர்த்தகர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார்.
மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள்
அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. இந்நிலையில் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து பைகளை எடுப்பதற்காக வர்த்தகர் நேற்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 நவீன கைத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகள் கைதான வர்த்தகரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.