தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பினால் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான நுவரெலியா பிரதான தபால் நிலைய கட்டிடத்தினை முழுமையாக பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தொல்பொருள் நினைவுச்சின்னமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தபால் நிலையத்தை பார்வையிட தவறாமல் செல்வார்கள் இதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வருகைந்தந்து பழமையான தபால் நிலையத்தினை பார்வையிட முடியாமல் இருப்பதால் கடும் அதிருப்தியை வெளியீடுகின்றனர்.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.