ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 34.5 சதவீதமாக அதிகரிப்பு!
கடந்த வருடத்துடன், ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 34.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானமானது 269.3 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.
அதேநேரம் 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டில் பதிவான 2.07 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது 53.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 44 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 19.9 சதவீதம் அதிகரித்து 3,67,804 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.