பாதாள உலகக் குழுத் தலைவரின் பிரதான சகா கைது
அம்பலாங்கொடை, கந்தேகொட குருந்துவத்தை வீதியில் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான உதவியாளர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் சனிக்கிழமை (14) அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை
ஐந்து பேர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேகநபரான தற்போது வெளிநாட்டில் வசிக்கும் "ஜெயசேகர சூட்டி" எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவனின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவரே இவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தேகொட குருந்துவத்தை வீதியில், கந்தேகொட ரயில் நிலையத்திற்குப் பின்னால் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக சந்தேகநபர் தங்கியிருப்பதாக அம்பலாங்கொட பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற சந்தேகநபரை, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர் வசம் இருந்த 101 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் பிணையில் வெளிவந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் (15) பலப்பிட்டிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.