யாழில் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான வியாபாரம்: இருவர் சிக்கினர்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவைக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் இன்றைய தினம் (15-07-2022) கசிப்புடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூளாய் – முன்கோடை பகுதியில் கசிப்பினை விநியோகம் செய்தவேளை 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1500 மில்லிலீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சுழிபுரம் – குடாக்கனை இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 1500 மில்லிமீட்டர் கசிப்பினை விநியோகம் செய்ய முற்பட்டவேளை அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் கசிப்பு வியாபாரம் தலைதூக்கி இருந்த வேளை கசிப்பினாலேயே இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது.
அதன்பின்னர் பொலிஸாருக்கு சவால் விடும் வகையில் மீண்டும் கசிப்பு வியாபாரம் தலை தூக்கியுள்ளது.
இரண்டு கொலைகள் இடம்பெற்றது கூட பெரிய விடயமாக கருதாமல் கசிப்பு வியாபாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் நாட்களை கடத்தி வருகின்றனர்.