யாழ்ப்பாண பெண்களின் இன்றைய நிலை; செஞ்சொற் செல்வர் வேதனை!
கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அண்மைகாலங்களாக சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பழக்கமும் , குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றது.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பராயத்தினரே. நமக்கு அடுத்துவரும் சந்ததிகளின் நிலை என்னவாகுமோ என்ற கவலை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவர்கள் தமது கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம் சமூகத்தின் அடையாளங்களை அழிக்கும் கொண்டாட்டங்கள்
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் இந்த அவலநிலை குறித்து செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், தனது கவலையினை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெற்றோரிடமும் முக்கிய கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.
முன்பெல்லாம் யாழ்ப்பாணத்திலே ஒரு வீட்டிலே பெண் பிள்ளை இருக்கின்றது என்பதை அந்த வீட்டினை சுற்றி, கட்டப்பட்டுள்ள மதில் சுவர் மூலமோ அல்லது சுற்றி அடைக்கப்பட்ட வேலியின் மூலமோ எளிதில் கண்டு கொள்ள முடியும்.
தங்கள் பெண் பிள்ளை தங்களுக்கு மட்டுமே அல்லாமல் உலகத்திற்கு காட்ட அல்ல என்ற சமூக ஒழுக்க சிந்தனையுடன் பெண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள்.
தற்காலத்தில் ஒரு வீட்டில் பெண் பிள்ளை ஒன்று பருவமடைந்து விட்டால் நாகரிக படப்பிடிப்பு என்ற பெயரில் வீட்டில் உள்ள நீர் தொட்டியிலும், குளக் கரைகளிலும், கடற்கரைகளிலும் நீராட விட்டு, அந்தப் பெண் பிள்ளையை பல வடிவங்களில் பல ஆடவர்கள் படம் பிடித்து வருகின்ற காட்சிகளை இதுதான் தற்கால நாகரிகம் என்று உலகம் முழுவதும் பரப்பி பெருமை தேடிக் கொள்கின்றார்கள்.
இதில் மனவருந்தமான விடயம் என்னவென்றால் அந்தப் பெண் பிள்ளையை பெற்ற பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் இதுதான் தற்கால சமூக ஒழுங்கு என்று எண்ணி வேடிக்கை பார்ப்பதுதான். உண்மையில் இந்த அவல நிலை எங்களிடம் இருந்து மாற வேண்டும்.
எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பெண் பிள்ளை இருந்தால் அந்தப் பிள்ளை தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்த உறவுகளுக்கும் முன்மாதிரியாக இருந்தாள். பெண் பிள்ளைகளுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரியின் பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையில் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் நமது சமூகத்திலே வாழ்ந்துள்ளார்கள்.
இந்தகைய பெருமைகளை தற்கால யாழ்ப்பாணத்திலே நாங்கள் காண முடிவதில்லை. திருமணத்திற்கு நாள் பார்த்த பெண் பிள்ளை ஒன்றை, நல்ல நேரம் பார்த்து அமங்கலங்கள் எதுவும் நிகழக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக பெற்றோர்களும் உறவினர்களும் கருமங்களை ஆற்றி திருமணத்திற்கு அழைத்து செல்வார்கள். எங்கள் பிள்ளை சகல செல்வங்களும் பெற்று சுமங்கலியாக நீடுழி வாழ வேண்டும் என்று பெற்றோர்கள் ஒவ்வொரு கருமங்களையும் மிகுந்த பயத்துடன் செய்வார்கள்.
திருமணத்திற்கு நாள் நேரம் குறித்த திருமணப் பெண்ணை தற்கால யாழ்ப்பாணத்திலே நள்ளிரவிலே அலங்காரம் என்ற பெயரிலே அழைத்து செல்கின்றார்கள், தமிழ் பெண்ணாக அலங்காரத்திற்கு செல்லும் பெண் அலங்கரப்பு முடிய கேரளப் பெண்ணாக, பாகிஸ்தான் பெண்ணாக, காஸ்மீர் பெண்ணாக வெளியிலே வருகின்றது.
எங்கள் தமிழ் பெண்களை மணமகள்களாக எங்கும் காண முடிவதில்லை. இந்த அலங்கரிப்பு கேராள அலங்கரிப்பு, இந்த அலங்காிப்பு, பாகிஸ்தான் அலங்கரிப்பு, இந்த அலங்கரிப்பு காஸ்மீர் அலங்கரிப்பு என்று பெருமை பேசுகின்றார்களே தவிர தமிழ் பெண்களாக இருக்க விரும்புவதில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்பு யாழ்ப்பாண வரலாற்றினை ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்திலே கேரளப் பெண்களும், பாகிஸ்தான் பெண்களும், காஸ்மீர் பெண்களும் வாழ்ந்தற்கான சான்றுகள் உள்ளது என கூறுவார்கள்.
யாழ்ப்பாண தமிழ் பெண்களுக்கென ஒரு தனிச் சிறப்பு இருக்கின்றது. நமது நாட்டினை ஆட்சி செய்த போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்களின் சிறப்புக்கள் பற்றி பல குறிப்புக்களை சொல்லியிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள் மிகவும் உற்சாகமானவர்கள் அதிகாலையிலேயே எழுந்து அனைத்து கருமங்களையும் மிக வேகமாக நிறைவேற்றக் கூடியவர்கள் தமக்குரிய கடமைகளை தாமே சிறப்பாக உரிய காலத்திலே செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என பல குறிப்புக்களில் அவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
ஆனால் தற்கால யாழ்ப்பாணத்திலே அதிகாலையே முப்படையினரும் அரசாங்க அலுவலர்களும் வந்து வீட்டின் கதவுகளை தட்டி உங்கள் வீடு டெங்கு நுளம்பு பெரும் அளவிற்கு அசுத்தமாக உள்ளது என கூறும் அளவிற்கு நிலமை மாறியுள்ளது. ஒரு இனத்தினை அழிக்க யுத்தம்தான் செய்ய வேண்டும் என்றல்ல மாறாக அந்த இனத்தின் பண்பாட்டினை அழிக்க அழிக்க அந்த இனத்தின் அடையாளங்கள் அழிந்து போய்விடும். எங்கள் தேவஸ்தானத்தின் தலைவியாக இருந்த சிவத்தமிழ் செல்வி அவர்கள் பெண்களின் ஒழுக்க விழுமியங்களில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.
ஒவ்வொரு தமிழ் பெண்ணும் எவ்வாறு கோவிலுக்கு வர வேண்டும் என கண்டிப்புடன் சொல்லிக் கொடுப்பார். அம்மாவின் முன்பு யாரும் அரைகுறை ஆடையுடனோ தலைவிரி கோலத்துடனோ வர முடியாது. எங்கள் பண்பாட்டின் மீது அம்மாவின் அக்கறை மிகவும் கண்டிப்புடனே இருக்கும். ஒருமுறை எங்கள் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்ய நிகழ்வு ஒன்றிக்கு பிரதம விருந்தினராக அழைத்த ஒருவர் முழுநீளக் காற்சட்டையுடன் வந்து விட்டார்.
அதற்கு அம்மா அவர்கள் எங்களுக்கென ஒரு பண்பாடு இருக்கின்றது இவரை அழைத்து சென்று புதிய வேட்டி ஒன்று கொடுத்து கட்டி வரச் சொல்லுங்கள் என என்னிடம் தெரிவித்தார். பிரதம விருந்தினராக வந்தவருக்கு புதிய வேட்டி கொடுத்து நாங்கள் நிகழ்விலே பங்கு பற்ற செய்தோம். நாங்கள் எங்கள் பண்பாட்டை இழக்க இழக்க எங்களின் அடையாளங்களும் இழந்து கொண்டுதான் போகும் என்ற வேதனையான செய்தியை பலரும் தற்காலத்தில் அறிவதில்லை.
நாகரிகம் என்ற பெயரில் செய்யக்கூடாத கருமங்களை எல்லாம் செய்து தாங்கள் பெருமை தேடிக் கொள்வதாக எண்ணி சிறுமையில் வாழ்கின்றார்கள். எங்கள் சிவத்தமிழ் செல்வி அவர்கள் எங்கள் இல்லப் பிள்ளைகளை வளர்க்கும் போது பெண்களின் பண்பாடு வாழ்க்கை முறை பற்றி ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்து வளர்த்தார்.
அந்த வளர்ப்பின் பயனாக எங்கள் பிள்ளைகள் எங்கு சென்றாலும் தமிழ் பண்பாட்டுடனேயே செல்கின்றார்கள். எங்கள் தேவஸ்தானத்தில் எந்த மூலையில் நின்றாலும் அந்தப் பிள்ளை தேவஸ்தானத்தின் பிள்ளை என்று எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு எங்கள் பிள்ளைகள் பண்பாட்டுடன் வளர்கின்றார்கள்.
எங்களின் பண்பாடே எங்களிற்கு உயர்ந்தவை என்ற எண்ணம் எங்களிடம் வர வேண்டும். நாங்கள் அனைவரும் வீணான போலிகளுக்கு ஆட்படாமல்,
நம் முன்னோர்கள் கட்டிக் காத்த பண்பாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து எங்களுக்குரிய பெருமைகளை நாங்களே பாதுகாத்திட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.