தங்களது தேவைக்காக மாறி மாறி அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்(Video)
இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் நாடாளுமன்றின் இன்று சாடினார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள் என தெரிவித்த அவர்,
சட்டங்கள்
இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரையை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையை பறிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றதாகவும் குறிப்பிட்டார்.
3ஆவது திருத்தச் சட்டம் 6வருடங்கள் ஒரு ஜனாதிபதி ஆட்சியில் இருக்கலாம் என்ற சட்டத்தை மாற்றி ஆட்சி காலத்திலே 4 வருடங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
6ஆவது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களை இந்த சபையில் இருந்து துரத்துவதற்காக கொண்டு வந்த சட்டம்.
13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக பிறப்பிக்கப்பட்ட குழந்தை.
18ஆவது திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்ச அவர்களது அதிகாரத்தை பலப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம்.
19ஆவது திருத்தம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்.
20ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் கோட்டாபயவின் அதிகார வெறிக்கு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம்.
ஆக மொத்தத்தில் இங்கு வருகின்ற திருத்தச்சட்டங்கள் எல்லாம் ஒரு சிலரது விருப்பங்களை அல்லது ஒரு சில கட்சிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் இந்த திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.