இன்று மகா சிவராத்திரி தினம்; நான்கு கால பூஜைகளை வழிபட கிடைக்கும் பலன்கள்; என்னென்ன தெரியுமா?
இன்று மகா சிவராத்திரி தினமாகும். சிவராத்திரியானது இந்த உலகின் தலைவனான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது.
அதோடு இன்றைய தினம் நீந் நிலைகளின் நீட்ராடுவது புனிதமாக கருதப்படுகின்றது. ஏனெனில் அமிர்தமான கங்கை இந்த மாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிறைந்திருப்பதாகக் கூறுவார்கள். மாசி மாதம், மாசுகளை நீக்கி சிவத்தன்மையை வெளிப்படுத்தும் தன்மையுடையது.

தேய்பிறை சதுர்தசி திதியானது `மகாநிசி' காலத்தில் அதாவது அமாவாசைக்கு முன்னர் வரக்கூடிய இரவு 11.36 முதல் 12.24 வரை சதுர்தசி திதி இருப்பின் அன்றே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் .
'மாசிக்கயிறு பாசிபடியும்' என்பது பழமொழி. இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவது சிறப்பு. உமையம்மையார் சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி நன் நாளாகும் .
அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.

மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவனின்பால் மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.
அதேசமயம் மாசி மாத மகா சிவாராத்திரிக்கு மற்றுமொறு சிறப்பும் உண்டு. அதாவது மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
நலம் தரும் நான்கு கால பூஜை
மகாசிவராத்திரி நன்னாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாலை சிவபூஜை செய்வதற்கு முன்பாகவோ ஆலயம் சென்று தரிசனம் செய்வதற்கு முன்பாகவோ மீண்டும் நீராட வேண்டும். பின்பு இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜைகள் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி - முதல் கால பூஜை
மழலைச் செல்வம் வேண்டுவோர் வணங்க வேண்டிய முதற்காலம் மாலை 6.27 முதல் கால பூஜை தொடங்கும். இந்தக் காலத்தில் சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும்.
'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று.
சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன.
'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்று பொதுவான அர்த்தம் கூறினாலும் 'ராத்ரம்' என்பதற்கு 'அறிவு' என்னும் பொருளும் உண்டு என்பர். சிவராத்திரியானது இந்த உலகின் தலைவனான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது என்கின்றன சாஸ்திரங்கள்.
இதில் மற்றுமொறு சிறப்பும் உண்டு. மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். எனவே தவறாமல் மகாசிவராத்திரி நாளில் நாம் வழிபாடுகள் செய்து பலன்பெறலாம்.
இல்லறம் நல்லறமாக விளங்க விரும்புகிறவர்கள், மழலை வரம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய காலம் முதற்காலம். மகா சிவராத்திரி.

இரண்டாம் கால பூஜை
இரண்டாம் கால பூஜைகள் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை நடைபெறும். இந்த பூஜையில் நாம் ஈசனை கல்விச் செல்வம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது ஆலமர் செல்வனாக -ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக உபதேசிக்கும் ஞான வடிவம் இது.
இந்தத் திருவுருவை மகாசிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

மூன்றாம் கால பூஜை, - இரவு 12.00
லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.
லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம்.
இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவபெருமான் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது.
இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

நான்காம் கால பூஜை - இரவு 4.00
சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும்.
‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய சிவபெருமான் அதன் மீது ஏறிக் கொண்டு, அருள்புரிந்த நிலையே ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்தார்.
இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டுப் பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் சௌபாக்கியம் கிட்டும் எனவும் கூறப்படுகின்றது.
எனவே மஹா சிவராத்திரி தினமான இன்று ஆலயம் சென்று சிவனின் பரிபூரண அருளை பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ்வோம்.