கோப் மற்றும் கோபா குழுக்களின் புதிய தலைவர்களை தெரிவு செய்ய தீர்மானம்!
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில்,நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த அமர்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுக்களின் உறுப்பினர்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு பெயரிட்டிருந்ததுடன், அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் சபையில் அறிவித்தார்.
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை, புதிய கோப் குழுவில் உறுப்பினராக நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று யோசனை முன்வைத்தார்.
குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கோப் குழுவில் இருந்து விலகுவதற்கு சுயாதீன தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள தேசிய பேரவை நாளைய தினம் கூடவுள்ளது.