இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு ; TIN இல்லாமல் வருமான வரி உரிமம் பெற முடியாது
இலங்கை முழுவதும் வாகன வருமான வரி உரிமத்தை (Revenue Licence) புதிதாகப் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை 2026 ஜனவரி 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழான (CR) சமர்ப்பிக்கப்படும் போது, அதனுடன் TIN சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வாகன உரிமை மாற்றத்தின் போது MTA 11 மற்றும் CMT 52 படிவங்களுடன், CMT 52 படிவத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் TIN சான்றிதழையும் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
இதற்காக TIN சான்றிதழின் அச்சுப் பிரதிகள் மற்றும் மின்னணுப் பிரதிகள் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நடைமுறையிலிருந்து பின்வரும் தரப்பினருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது:
- 18 வயதுக்குக் குறைந்தவர்கள்.
- 183 நாட்களுக்கும் குறைவாக இலங்கையில் தங்கியுள்ள தகுதியான வெளிநாட்டவர்கள்.
- TIN பதிவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்.
- இராஜதந்திர சலுகைகளைப் பெற்றவர்கள்.
- தனிநபர்கள் அல்லாத நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்.
மேலும், வாகனப் பதிவு, வங்கிச் சேவைகள், காணிப் பதிவு மற்றும் வணிகப் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் TIN நடைமுறை தொடர்புடையதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன உரிமையாளர்கள் தமது வருமான வரி அடையாள இலக்கச் சான்றிதழை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது அவசியமாகியுள்ளது.