யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு அரங்கேறிய கொடூரம்; கண்டுகொள்வார் யாருமில்லையா?
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் இ ளம் தாயையும் குழந்தையையும் வன்முறை கும்பலிடம் இருந்து மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார்.

காப்பாற்ற சென்ற முதியவரின் விரல் பறிபோனது
இந் நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும், மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர்.
அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது, அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.