மூன்று வயது சிறுமியின் முகத்தில் 50 தையல்கள் ; பிளாஸ்டிக் சர்ஜரி வரை கொண்டு சென்ற ஒற்றை நாய்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள தெல்வாடி கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை தெருநாய் ஒன்று கொடூரமாக கடித்தது.
இந்தத் தாக்குதலில் அச்சிறுமியின் மூக்கு, உதடு மற்றும் கண் இமை பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு முகம் சிதைந்தது.

அவசர அறுவை சிகிச்சை
முதலில் அகர்-மால்வாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் சிசித்சாலயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரது முகத்தில் சுமார் 50 தையல்கள் போடப்பட்டு, தோலை மீண்டும் இணைப்பதற்கான அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுமியின் முகம் நிரந்தரமாக கோணலாக மாறுவதை தடுக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.