யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையிலுள்ள 10 முக்கிய நகரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அண்மைய தேசிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக, "வாழும் நகரங்கள்" எனும் பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உட்கட்டமைப்பு மேம்பாடு
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக , யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மாத்தளை, ஹட்டன், சிலாபம், தம்புத்தேகம , பதுளை,எஹெலியகொடை,மாத்தறை ஆகிய 10 நகரங்கள் திட்டமிட்ட மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை நகரங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொது வசதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுமே இதன் முதன்மை நோக்கமாகும் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நகரங்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் , முறையான போக்குவரத்துத் திட்டங்களை உருவாக்குதல், பன்முக போக்குவரத்து முனையங்களை அமைத்தல், வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைத்தல். நகர்ப்புற வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவ முறைகளை மேம்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதிகளை விரிவாக்குதல்.
புதிய வணிக வளாகங்கள் மற்றும் வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்தல் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் இந்த திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளன.
இந்த அதிகாரசபையின் முறையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ், அனைத்து நகரங்களும் அந்தந்தப் பகுதிகளின் தனித்துவமான அம்சங்களுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.