இந்தியாவில் இருந்து யாழிற்கு திரும்பிய மூவர் பிணையில் விடுவிப்பு: நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழர் தாயகப் பகுதியில் நிலவிவந்த யுத்தம் காரணமாக ஏற்பட்டிருந்த போர்ச் சூழலின் போது குடத்தனை வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அபராதம்
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சென்று சுமார் 33 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கி இருந்த போது பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (2023.11.14) நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த மூவரையும் தலா ஒரு இலட்சம் பெறுமதி ஒரு ஆட் பிணை, 10 ஆயிரம் ரூபா காசுப் பிணை மற்றும் மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்..
குறித்த வழக்கு எதிர்வரும் 2024/07/01 திகதி அறிக்கைக்காக தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.