யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் சங்கமம் - 2026' நிகழ்வு, இன்று வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.

தேசிய ஒற்றுமை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது யாழ். மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்க தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இருப்பதை விட சிறந்த வாழ்க்கை நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இங்கிருக்கும் அநேகமானோர் கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து யாழ் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள பங்களித்தவர்களாகும். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம்.
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம். மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தயக்கமின்றி எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்.
இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் பிரியாதிருப்போம். நாம் ஒன்றுபடுவோம். சிறந்த நாட்டை எமது மக்களுக்காக உருவாக்குவோம். அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.