வாழைச்சேனையில் பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து...ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் உள்ள வாழைச்சேனை - மியான்குளம் பகுதியில் நேற்றிரவு (04-12-2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த விபத்தில் 3 பேர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலன்னறுவையில் இருந்து நாவலடி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், நாவலடி பகுதியிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த பெண் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகியோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.