கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பேர் அதிரடியாக கைது
நான்கரை கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பேங்கொக்கிலிருந்து வந்த மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த மூவரையும் கைது செய்தனர்.
அவர்கள் தங்கள் பயணப் பொதிகளுக்குள் இருந்த உணவு பதார்த்தங்கள் அடங்கிய பக்கற்றுகளுக்குள் குறித்த போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய நபர் பதுளையைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.