நண்பனை கொன்று புதைத்த கொடூரம் ; பொலிஸாரின் பிடியில் மூவர்
மனிதக் கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருதலாவ, கருவலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தனது கணவர் காணாமல் போயுள்ளதாகக் கூறி, அவரது மனைவியினால் கடந்த 24ஆம் திகதி பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
தனது கணவர் இறுதியாக கெஸ்பேவை பிரதேசத்திலுள்ள நண்பரொருவரைச் சந்திப்பதற்காகச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பேராதனை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் கெஸ்பேவை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், காணாமல் போனதாக கூறப்படும் நபர் கடந்த 23ஆம் திகதி காலை கெஸ்பேவை பகுதியில் தனது நண்பரைச் சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குறித்த நண்பர் மேலும் சிலருடன் இணைந்து பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் வைத்து அவரைக் கொலை செய்து, சடலத்தைக் காட்டுப்பகுதியொன்றில் புதைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மடபாத்த மற்றும் பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 36 மற்றும் 37 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் நேற்று (28) கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் கெஸ்பேவை நீதவான் இன்று (29) ஸ்தலப் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், கெஸ்பேவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.