அமெரிக்க நிறுவனங்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ; சற்று முன்னர் ஈரான் வெளியிட்ட கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் செயல்படும் முன்னணி அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி தெஹ்ரான் நேரப்படி இரவு 8.00 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, குறிவைக்கப்படக்கூடிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளாக வாய்ப்புள்ள அமெரிக்க நிறுவனங்களாக Cisco, HP, Intel, Oracle, Microsoft, Apple, Google, Meta, IBM, Dell, Palantir, Nvidia, JP Morgan, Tesla மற்றும் GE ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அறிவிப்பு, தற்போதைய பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.