இலங்கையில் 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழப்பு !
இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
காட்டு யானைகள் உயிரிழப்பு
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 1,466 காட்டு யானைகளும், 2020ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 2,011 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, கடந்த 9 ஆண்டுகளில் காட்டு யானைகளின் தாக்குதலினால் 1,190 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
யானை - மனித மோதலுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு சிறிது காலம் எடுக்கும், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
காட்டு யானைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வு முறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிணைத்து இதற்கு தீர்வு காணப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.