கழிப்பறையில் தண்ணீர் இல்லை... வேலை செய்ய முடியாதவர்கள் வெளியேறுங்கள்; அமைச்சர் பிமல் பாய்ச்சல்
ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க காட்டமாக கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கழிப்பறையில் தண்ணீர் இல்லை
ரயில்வே துறை தனது பொறுப்புகளை புறக்கணித்து பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்கத் தவறியதற்காக விமர்சித்தார்.
ரயில்களில் ஜன்னல்களை சரியாக மூடவேண்டும். அவை சரியாக மூடப்படாத போது, இருக்கைகள் நனைந்துவிடும். எந்த மின்விசிறியும் வேலை செய்யாது. காலியில் இருந்து கொழும்புக்கு இரண்டரை மணி நேர பயணத்தில், ஒரே கழிப்பறையில் தண்ணீர் இல்லை.
இவை அலுவலக ரயில்கள் - ஆனால் பயணிகள் இதுபோன்ற சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிகாரிகள் பொதுமக்கள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை, என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.
அதோடு ஜா-எலாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் தனது முதல் ரயில் பயணத்தின் போது பழுதடைந்த ஜன்னலில் விழுந்து இரண்டு விரல்களை இழந்த சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் ரத்நாயக்க இதன் போது சுட்டிக்காட்டினார்.