வழிப்பறிகளில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இறக்ககாமம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்பவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களைக் கொள்ளையிட்டு, அவற்றில் சென்று ஆபரண கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபர் 46 வயதுடைய இரக்ககாமம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவரிடமிருந்து 3 கிராம் 220 மில்லி கிராம் ஹெரோயினும் கொள்ளையிடப்பட்ட மோட்டர் சைக்கிளும் , 31 வயதுடைய மற்றைய சந்தேகநபர் வானகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரது வீட்டிலிருந்தும் கொள்ளையடிப்பதற்காக உபயோகிக்கப்பட்ட மோட்டார் சைக்கிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைதான இருவராலும் கொள்ளையிடப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.