விடுதலை புலிகளின் தலைவர் இல்லம் சென்ற திருமா; பாஜக கண்டனம், காங்கிரஸ் பாராமுகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த இடத்துக்கு, தொல். திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் இந்தப் பயணம், கூட்டணிக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்
இது குறித்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை மௌனம் காத்து வருகிறது.
மறைந்த மூத்த தமிழ் அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த தொல். திருமாவளவன், செம்மணி மனிதப் புதைகுழி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (17) வல்வெட்டித்துறையில் பிரபாகரன் தனது சிறுவயது காலத்தைக் கழித்த இல்லம் அமைந்திருந்த இடத்துக்கும் சென்ற அவர் ,சுற்றிப் பார்க்கும் காணொளிகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
திருமாவளவனின் இந்தப் பயணத்திற்குத் தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,
திருமாவளவனின் செயலை "வெட்கக்கேடானது மற்றும் மன்னிக்க முடியாதது" என விமர்சித்துள்ளார். அத்துடன் தமிழக ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியையும் பாஜக, கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜகவின் இந்தத் தொடர் விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள போதிலும், திருமாவளவனின் பயணம் குறித்தோ அல்லது பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.