இலங்கையில் இப்படியும் நடக்கின்றது!
கட்டுநாயக்காவிலிருந்து கண்டிக்கு வாடகை காரில் பயணம் செய்த நபர் ஒருவர் , சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, வாகனத்தை கடத்திய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் அண்மையில், மாவனல்லை வலகடய பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சுமார் 4.3 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை கடத்திய குறித்த நபர், இணையத்தளம் ஊடாக குறைந்த விலையில் அதனை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கடத்தப்பட்ட கார் இரத்தினபுரி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கைதான கடத்தல்காரர் 33 வயதான கிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் குறித்த நபர் , கல்கிசையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாட்டின் பல பகுதிகளில் முச்சக்கர வண்டி மற்றும் கார் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாவனெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.