இது ஆபத்தான மாதம்; இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
இந்த மாதம் இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கொரோனா மரணங்கள் 48.8% அதிகரித்துள்ளதாகவும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அவர், நாட்டின் அபாயங்களை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனவே அவசர தேவைக்காக அன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார். இந்த மாதம் மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா ஒழிப்புக்கான ஒரே தீர்வு நோய் பரவாமல் தடுப்பதே என்றும் அவர் கூறினார்.
அரசாங்கமோ அல்லது எவரும் சட்ட நடவடிக்கைக்காக காத்திருக்காமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தேவையற்ற பயணங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும் "உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது," என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.