திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் ; வழக்கு விசாரணைகள் ஆரம்பம்
மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே திருக்கேதீஸ்வர கோயில் வளைவு 2019-ஆம் ஆண்டு உடைத்த சம்பவம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணை
ஆறு வருடங்கள் கடந்த நிலையிலேயும் இன்றைக்குத் தான் முதல் தடவையாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 10 பேருக்கு எதிராக இந்த வழக்கு ஆரம்பம் ஆகி இருக்கிறது. அதிலே ஒருவர் மரணித்துவிட்டார்.
மீதம் உள்ள ஒன்பது பேர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலாவது சாட்சியாளர் சாட்சி அளித்த மிக முக்கிய நேரத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூண்டிலுள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமானவர்கள் வளைவு உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற அடிப்படையான காரணத்தினால், குற்றப்பத்திரிகையில் முதலில் பத்து பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டன.
ஆனால், பிறர் சேர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டதையும் குற்றப்பத்திரிகையில் தெளிவான முறையில் குறிப்பிட வேண்டும் என நீதவான் வலியுறுத்திய காரணத்தினால், அந்த நேரத்தில் விசாரணை இடைநிறுத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை திருத்தப்பெற்று, மேலதிக விசாரணைக்காக 2026 ஜனவரி 23-ஆம் திகதிக்கு நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த நாளில் பரிசீலனை முடிந்து, அதிகமான குற்றச்சாட்டாளர்கள் சேர்த்து குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு, இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.