கர்ப்பிணிப் பெண்ணுடன் காரை கடத்திய திருடன் ; சினிமா பாணியில் சுட்டு பிடித்த பொலிஸார்
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
குறித்த காரை சந்தேக நபர் திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. நேற்றிரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் வாசல வீதியில், தனது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயாருடன் காரில் வந்த ஒருவர், கார் இயந்திரத்தை இயங்கச் செய்ததோடு, உணவு வாங்குவதற்காக கொட்டாஞ்சேனை வீதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், சாரதியின் மனைவி மற்றும் தாயார் உள்ளே இருந்த போதே சந்தேக நபர் திடீரென குறித்த காரைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக கெப் வாகனத்தில் வந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, இந்த கார் திருடப்பட்டமை தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே விரைந்து செயற்பட்டு, தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
இருப்பினும், பொலிஸாரின் உத்தரவை மீறி சந்தேக நபர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால், பொலிஸ் அதிகாரிகள் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் வைத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து காரை நிறுத்த முடிந்தது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், காரில் இருந்த கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவருக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.