தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது இருக்கவில்லை! முக்கியஸ்தர் வெளியிட்ட கருத்து
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அடக்குமுறை என்பது இருக்கவில்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (09-01-2024) முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு வரும்போது வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் இணைந்து அந்தந்த மாவட்டங்களில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் நடாத்தியிருந்தார்கள். அதில் இரு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைக்காக வருவதென்றால் தேர்தல் நடவடிக்கைக்காக வந்து பிரச்சாரத்தை செய்தால் அது வேறு, ஆனால் நீதியை நிலைநாட்டாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயத்தில் மட்டுமல்ல நில அபகரிப்பு, கடலில் மீன்பிடித்தல், சகல தீர்வுதிட்ட விடயங்களிலும் அவர்களுக்கான தீர்வினை வழங்காமல் ஜனாதிபதி என்ற பேரில் இங்கு வந்து சிரித்து கொண்டு புகைப்படம் எடுப்பதற்காகவே யாழ்ப்பாணம், வன்னிக்கு வருகிறீர்கள் என்றால் நாட்டை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதனை யோசித்து பாருங்கள்.
பொருளாதார பிரச்சினையால் மக்கள் பட்டினி கிடக்கின்றார்கள் நாடு சின்னாபின்னமாகி இருக்கின்றது.
2009 மௌனித்த யுத்தம் 16 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. தீர்வுகளை வழங்கி விட்டு இங்கு வந்து போட்டோக்கு போஸ் கொடுங்கள்.
ஜெனிற்றா அவர்களுக்கு விடுதலை வேண்டும் பொலிஸாரின் அராஜகம் என இவர்கள் சொன்னது உண்மை, பொலிஸார் மேலிடத்து உத்தரவால் அடக்கு முறையாக செயற்படுகின்றார்கள்.
விடுதலைபுலிகளின் காலத்தில் இவ்வாறு அடக்குமுறைகள் இல்லை. எங்களுடைய நிலங்கள், மதங்கள், கடல்கள் காப்பாற்றப்பட்டது.
தீர்வு திட்டங்கள் என்று கூறி ஏற்றுக்கொண்டதே தவிர இன்று அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதனை உலக நாடுகள் கண்காணித்து எங்களுக்கான தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வினை முன்வைக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.