அதானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை
அதானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்களுக்கு சுமையாக அமையும் வேலைத்திட்டங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பொறுத்தமான வேலைத்திட்டங்களை அதானி முன்வைத்தால் அது குறித்து ஆராயப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
ஜனாதிபதி இந்திய விஜயத்துக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டில் அவரது இந்திய விஜயத்தின் பின்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது உண்மையல்ல. நாம் முதலீடுகளை ஊக்குவிக்கின்றோம்.
அந்த வகையில் எமக்கு பொறுத்தமான முதலீட்டுக்கான முன்மொழிவுகளை அதானி நிறுவனம் முன்வைத்தால் அது தொடர்பில் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
எவ்வாறிருப்பினும் உத்தேச காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தில் மின் அலகொன்றுக்கான விலை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஸ்திரமான நிலைப்பாடொன்று உள்ளது. எனவே நாம் கூறுவதைப் போன்று அந்த விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விலை திருத்தத்தை மேற்கொள்ள விரும்பினால் பேச்சுவார்த்தைகளை தொடரலாம். அவ்வாறில்லை எனில் அவர்கள் விரும்பினால் திட்டத்தை இரத்து செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஏனைய சகல முதலீட்டாளர்களும் வெளியேறுவதாக அர்த்தமில்லை.
எந்த முதலீடானாலும் அது எம்மால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும் பட்சத்தில், அதனால் ஏற்படக் கூடிய சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டியேற்பட்டால் அவ்வாறானதொரு திட்டம் எமது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது இந்திய விஜயத்தின் போது இதனை மிகத் தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.
மக்களுக்கு சாதகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கன்றி, குறிப்பிட்டவொரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அடிபணிவதல்ல என்றார்.