வர்த்தக நிலையத்தை உடைத்து பணம் தொலைபேசி திருட்டு
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து 28,000 ரூபாய் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 06ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையத்தின் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளையும் உடைப்பதற்கு சந்தேகநபர் சுமார் ஒரு மணிநேரம் எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் அங்கு வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டிருந்ததை அவதானித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருட்டுச் சம்பவம் இடம்பெறும் விதம் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கோரியுள்ளனர்.