அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ள விலங்கியல் பூங்கா
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
இதனை வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் மொத்த வருமானம் 508,377 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தில் ஏனைய அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் சாதனை வருமானத்தை ஈட்டியதாக விலங்கியல் திணைக்கள நிர்வாகம் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவித்துள்ளது.
வருமானம்
அதன்படி, பின்னவல யானைகள் சரணாலயம் ரூ. 947,000, பின்னவல உயிரியல் பூங்கா ரூ. 949,200 மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ரூ. 856,000 வருமானத்தை ஈட்டியுள்ளன.
தேசிய விலங்கியல் திணைக்களம் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிருகக்காட்சிசாலைகளை இலவசமாக பார்வையிட அனுமதித்த போதிலும், இவ்வளவு அதிக வருமானம் ஈட்டப்படுவது இதுவே முதல் முறை என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்த தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் விசேட மற்றும் நினைவு தினங்களில் மிருகக்காட்சிசாலைகளுக்கு மக்களை கவரும் வகையில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.