சூட்கேஸில் பெண்ணின் சடலம்; ஏன் கொலை செய்தோம்? கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட, பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்குளியைச் சேர்ந்த தம்பதியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைதான தம்பதியினர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (07) முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாளிகாவத்தையை சேர்ந்த பாத்திமா மும்தாஜ் (44), வியாழக்கிழமை (04) பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர். சூதாட்டத்திலும் ஈடுபடுபவர். கடந்த மாதம் 28ஆம் திகதி முச்சக்கர வண்டியொன்றில் பிறிதொரு தம்பதியுடன் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
கைது செய்யப்பட்ட தம்பதியினரும் நௌஷாத் என்பவரும் மும்தாஜை பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் படுகொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான நௌஷாத் தற்போது காணாமல் போயுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை களனி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய லொறியையும் களனி குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.