பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்த கெப் ரக வாகனம் ; ஏற்பட்ட பாரிய சேதம்
மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அண்மித்த பகுதியில் பாலமொன்றிலிருந்து கெப் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொனராகலை நகரை அண்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த டபள் கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும் பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், அப்பாலத்தின் ஊடாக மொனராகலை நகருக்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான நீர் குழாய் உடைந்துள்ளதனால், நகருக்கான நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாரதியின் கவனக்குறைவா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா விபத்திற்குக் காரணம் என்பது குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.