மூவரை பலியெடுத்த புகையிரதம்
கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் ஓட்டோ மோதியதில், ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காலி, ரத்கம-வில்லம புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மாமியார் மற்றும் மற்றுமொரு உறவினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகையிரத சமிக்ஞைகள் செயலிழந்த நிலையில் முச்சக்கரவண்டி தண்டவாளத்தின் ஊடாக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
புகையிரத விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது. சம்பவத்தில் தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த நிலையில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.