பெருக்கெடுத்த மகாவலி ஆறு ; மூடப்பட்ட வீதி, வெளியான முக்கிய அறிவித்தல்
மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் மனம்பிட்டியவில் மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளது.
இதனால் லங்காபுர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சோமாவதி வீதி மூடப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றின் நீர்மட்டம்
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளதாகவும், சுங்காவில - சோமாவதி வீதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அதிகாரிகள் வீதியை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
நாட்டில் மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஆற்றின் நீர் ஓட்டம் கணிசமாக அதிகரித்துள்ளமை ஆறு பெருக்கெடுக்கும் நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மகாவலி ஆற்றின் இருபுறமும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்தால் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களின்படி செயல்படத் தயாராக இருக்குமாறும் நீர்ப்பாசனத்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளப் பெருக்கு குறையும் வரை வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.