நீராடி கொண்டிருந்தவர் சடலமாக மீட்பு
நண்பர்களுடன் நீராடி கொண்டிருந்த ஆண் ஒருவர் நேற்று (14) பகல் அப் பகுதியில் உள்ள ஆற்று நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு பெரியகளப்பு ஆற்றில் இடம் பெற்றுள்ளது.
இதனை திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் முனை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம்
தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட நண்பர்கள் சம்பவதினமான வியாழக்கிழமை (13) முனைக்காடு ஆற்றுபகுதிக்கு சென்று அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு மது அருந்தி ஆற்றில் நீராடி களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் அருகில் சென்று வெற்றிலையை வாயில் போட்டு வருவதாக சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை அங்கு தேடிய நிலையில் அவரை காணாததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகல் காணாமல் போனவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நீரில் மிதப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.