யாழ்.எம்.ஜி.ஆர் ஆன ஒரு தீவிர இரசிகனின் கதை!
நேற்றைய தினம் யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் என்பவர் காலமானார்.
நேற்று (11) வியாழக்கிழமை மதியம் கோப்பாய் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.ஜி.இராமசந்திரனின் தீவிரமான ரசிகனாக கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (79) இருந்தார்.
யாழில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் திரையிடப்படும் தருணங்களில், அதை கொண்டாட்டமாக மாற்றிய இரசிகர்களில் சுந்தரலிங்கம் ஒருவர்.
எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம், திரைப்படத்தின் முதல் காட்சிகளில் திரையரங்களிற்கு அருகில் தாகசாந்தி நிலையங்கள் அமைத்து நீராகாரம் வழங்கினார். அப்போது கொழும்பிலிருந்து வெளியாகும் தந்தி பத்திரிகையில் அது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகியிருந்தன.
அந்த பத்திரிகை பிரதிகளுடன், கடல்வழியாக தமிழகம் சென்று, எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியுள்ளார். பத்திரிகை பிரதிகளையும் எம்.ஜி.ஆருக்கு காண்பித்தார். அப்போது இலங்கையில் உற்பத்தியாகம் சவர்க்காரம், பவுடர் என்பவற்றிற்கு தமிழகத்தில் கிராக்கியிருந்தது. தமிழகம் செல்லும் போது, அவற்றையும் எடுத்து சென்று எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.
அவரது அன்பில் மகிழ்ந்த எம்ஜிஆர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அவருக்கு பரிசளித்தார். சுந்தரலிங்கம் காலமாகும் வரை அந்த கண்ணாடியை அணிந்து வந்தார். அத்துடன், நடிகர்கள் நம்பியார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
யாழ்ப்பாணம் கல்விங்காட்டில் எம்.ஜி.ஆர் சிலையொன்றை அமைத்து, வருடாந்தம் அவரது பிறந்த, மரணித்த நாட்களில் அஞ்சலி செலுத்தி வந்தார்.