விரைவில் புதிய பிரதமர்! ரணில் - சஜித் மறைமுக நகர்வு
கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோராமல், விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்குச் சகல கட்சிகளும் ஒன்றினைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் பிரகாரம் அனைத்தும் தற்போது நடந்தேறிவருகின்றதாக என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
அதன் பிரகாரம் காலிமுகத் திடல் போராட்டத்துக்கு ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல ரணில், சஜித் மகாநாயக்கத் தேரர்களும் ஆப்பு வைக்கவுள்ளனர் என்பதையே தற்போதைய புதிய அரசியல் நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிப் புதிய ஒருவர் அரசாங்கத்துக்குள்ளேயே தெரிவு செய்யப்படுவாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார். நாளை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைப்பாரென பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகுவது உறுதியென பசில் ராஜபக்ச தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து விலகிச் சுயாதீனமாகச் செயற்படும் நாற்பது உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் பின்னரே மகிந்த ராஜபக்ச இவ்வாறு முடிவெடுத்ததாக பசில் கூறுகிறார்.
அதேசமயம் வேறு கட்சி ஒன்றைச் சேர்ந்தவருக்கே பிரதமர் பதவியை வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது குறித்து பிரதான எதிர்க்கட்சிகள் இதுவரை எதுவுமே கூறவில்லை.
நாடளாவிய ரீதியில் கோட்டாபய ராஜபபக்ச ஜனாதிபதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்திப் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.
அதேசமயம் மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் விரும்புவதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், தற்போதைக்குப் புதிய அரசாங்கத்தைப் பொறுப்பேற்க சஜித் பிரேமதாச தயங்குகிறார்.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றால், கடும் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும் என்பதோடு, உடனடியாகத் தீர்வு காண முடியாதெனவும் சஜித் கருதுகின்றார். அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த ஆறு மாதங்கள் வரையாவது இந்த அரசாங்கம் எப்படியாவது தப்பிப் பிழைத்துவிட வேண்டுமென விரும்புகின்றார்.
ஏனெனில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் படி இன்னும் ஆறு மாதங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தைக் கொண்ட நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் ஆக இரண்டு வருடங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ளன.
இதனால் அரசியல் யாப்பின் பிரகாரம் பதவிக் காலத்துக்கு முன்னரே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால் ஆகக் குறைந்தது இரண்டரை ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். ஆக யாப்பின் பிரகாரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முடிவடைந்த பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும்.
சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தற்போது முரண்பாடுகளில் உடன்பாடாகக் கூட்டுத் தேவையும் கூட்டு ஒற்றுமையும் அவசியமாகின்றன. இதனையே மகிந்தவின் பிரதமர் பதவி விலக எடுத்த முடிவு தெளிவாகச் சித்தரிக்கின்றது. அமெரிக்க- இந்திய புவிசார் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவுக்கும் இது ஆறுதல் தரும் செய்திதான் . எனவேதான் இன்னமும் மூன்று மாதங்கள் சென்ற பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் ஒன்றைச் சந்தித்தால் வெற்றிபெற முடியுமென ரணில் நம்புகின்றார் போலும்.
அத்துடன் சஜித்- ரணில் ஆகிய இருவருக்கும் இடையே முரண்பாடுகளும் நிலவுகின்றன. சஜித் அணியில் உள்ள 54 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் இழுக்க ரணில் முயற்சி எடுத்து வருகின்றார். அதற்கேற்ப சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
சரத் பொன்சேகா, கரின் பெர்ணாண்டோ ஆகியோர் நேருக்கு நேர் மோதுப்பட்டுள்ளனர். ஆகவே இவற்றைச் சாதகமாக்கி மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியைப் புதுப்பிக்க ரணில் முற்படுகின்றார். அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இந்த முரண்பாடுகளைச் சாதமாக்கித் தனது அடுத்த இரண்டு ஆண்டுகால ஜனாதிபதிப் பதிவியைத் தக்க வைக்க முற்படுகின்றார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதால் கோட்டா- மகிந்த மோதல் என ப்ரப்ரப்பு தகவல்களும் வெளியாகியிருந்தன. ஆனால் அவ்வாறு மோதல்கள் முரண்பாடுகள் ராஜபக்ச குடும்பத்துக்குள் இல்லையெனவும், மாற்று ஏற்பாடாகவும் மீளவும் பதவிகளைத் தக்க வைக்கும் உத்தியாகவுமே முரண்பாடுகள் இருப்பது போன்றதொரு தோற்றப்பாடு காண்பிக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் மாற்றுத் திட்டங்களுக்காகவே முரண்பாடு என்ற கதை பரவ விடப்பட்ட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதைவிட, அதிகாரப் போட்டிகளிலும் பதவிகளைத் தக்க வைத்தலுமே அரதரப்பு. எதிர்த்தரப்புச் சிங்களக் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரியே இளைஞர்கள் அணி , கொழும்பு காலிமுகத் திடலில் இருபது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றது. ஆனால்எனினும் சிங்கள எதிர்க்கட்சிகள் கூடச் செவிசாய்க்கவில்லை என்பதையே மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகப் போகும் செய்தி கட்டியம் கூறி நிற்கின்றது. மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய ஒருவர் பிரதமராகப் பதவியேற்றுப் புதிய அமைச்சரவை ஒன்று மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் உருவாகுவதையே ரணில், சஜித் ஆகியோர் மறைமுகமாக விரும்புகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம். உலக வங்கி உள்ளிட்ட பொது நிதி நிறுவனங்களும் அமெரிக்க- இந்திய அரசுகளும், ராஜபக்ச அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சியைத் தற்காலிகச் சீர்திருத்தமாக நம்பிச் செயற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. அப்படியானால். காலிமுகத்திடலில் நின்று போராடும் இளைஞர்களின் கோரிக்கைக்குப் பதில் என்ன? அகிம்சை வழியில் போராடும் சிங்கள இளைஞர்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் தோல்வியடைப் போகின்றனரா?
சோசலிசப் புரட்சிக்காக ஆயுதம் எடுத்துப் போராடிய மக்கள் முன்னணி எனப்படும் ஜே.வி.பி 1972 /1988-89 ஆம் ஆண்டுகளில் தோல்வியடைந்து, 1994 ஆம் ஆண்டு ஜனநாயக வழியில் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. அந்த அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு கட்சி அரசியலில் இன்று வரை ஜே.வி.பி ஈடுபடுகின்றது. ஆனால் ராஜபக்ச குடும்பம், ரணில,. சஜித் என்ற பெரிய அரசியல் குளறுபடித் தலைவர்களின் முடிவுகளுக்கு இடையில், பொறியில் அகப்பட்ட எலியாகத் ஜே.வி.பி தற்போது தவிக்கின்றது .
இவ்வாறானதொரு பின்னணியில் காலிமுகத் திடல் போராட்டத்துக்கு ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல ரணில், சஜித் மகாநாயக்கத் தேரர்களும் ஆப்பு வைக்கவுள்ளனர் என்பதையே தற்போதைய அரசியல் நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தனது கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கைப்பற்றி மீளவும் புதுப்பிக்கக் கடும் முயற்சி எடுக்கிறார். இதற்காக அவரும் ராஜபக்ச குடும்பத்தின் தற்காலிக முடிவை மறைமுகமாக ஆதரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டெனலாம். ஆகவே சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தற்போது முரண்பாடுகளில் உடன்பாடாகக் கூட்டுத் தேவையும் கூட்டு ஒற்றுமையும் அவசியமாகின்றன. காலிமுகத் திடல் போராட்டம் பகடைக் காயாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வது என்பதெல்லாம் இரண்டாம் கட்ட விவகாரமாகவே மாறியுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். மகாநாயக்கத் தேரர்களின் கடிதத்தின் பிரகாரம் எடுக்கப்படவுள்ள இந்த முடிவுக்கு ரணில், சஜித் ஆகியோரும் மறைமுக ஆதரவை வழங்கவுள்ள சூழலில், காலிமுகத் திடலில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாகக் காத்திருந்து போராடி வரும் இளைஞர்கள் எதிர்க்கப் போகின்றனரா? அல்லது கோட்டா பதவி வலிக வேண்டுமென்ற தமது போராட்டத்தை மேலும் இறுக்கமடைச் செய்வார்களா? அல்லது கைவிடுவார்களா என்பதைப் பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.
இந்த முடிவு பற்றி காலிமுகத் திடல் இளைஞர்கள் என்ன சொல்லப் போகின்றனர் என்பதை எதிர்ப்பார்க்கின்றரா? அல்லது வேறு மார்க்கத்தை நாடவுள்ளனரா என்ற கேள்விகள் சந்தேகங்களுக்கு மத்தியில், ராஜபக்ச குடும்பத்தின் தற்காலிக நகர்வை ரணில்- சஜித் ஆகியோர் எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றன.
எனவே இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு என்பது கண்டியை மையப்படுத்திய மூன்று மாகாநாயக்கத் தேரர்களின் முடிகளிலேயே தங்கியுள்ளதையும் அவதானிக்க முடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.